தமிழ் நாள்காட்டி (Tamil Calendar) என்பது தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு மாதங்களைக் (12 months) கொண்டது. இந்தியாவில் மட்டுமல்லாது பல ஆசிய நாடுகளிலும் கூட தமிழ் நாள்காட்டி சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் இன்றும் புழக்கத்திலுள்ளது. தமிழ் நாள்காட்டி இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகள் இந்துக் காலக் கணிப்பு முறை வெவ்வேறு வகையில் கடைப்பிடித்து வந்தாலும் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் மாதங்கள்
பண்டைத் தமிழர்கள் இரண்டு வகையாக மாதங்களைக் குறிக்கும் வழக்கத்தைக்கொண்டிருந்தனர். ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும் மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் தமிழ் மாதங்கள் கணக்கிடப்பட்டது.
சூரிய மாத பெயர்கணிப்பு
பூமியிலிருந்து பார்க்கையில் பூமியைச் சூரியன் சுற்றி வருவது போன்ற தோற்றத்தினைக் கொண்டதன் அடிப்படையில் வகுக்கப்பட்டது. அவ்வாறு சூரியன் ஒருமுறை பூமியினைச் சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையினை மையமாகக் கொண்டு 30 பாகை(degrees) அளவுகொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன.
சந்திர மாத பெயர்கணிப்பு
ஒரு சூரிய மாதத்தில், சந்திரன் (நிலா) பூரணை (முழுமையான முழுமதி) அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரினை சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது.
உதாரணம் சூரியன் மேஷ இராசியில் பயணிக்கும்போது, சந்திரன் சித்திரை நட்சத்திரம் வரும் நாளில் பூரணை அடைகின்றான். இதனால் சூரிய மாதமான மேஷ மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும்.
இன்றைய தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் இன்றும் சூரிய மாதப் பெயர்களே காலண்டரில் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய மாதங்களின் பெயர்களும், அதற்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
வரிசை எண் | தமிழ் சூரிய மாதம்(இராசி) | தமிழ் சந்திர மாதம் | கேரள நாட்காட்டியில் மாதப்பெயர் | அடையாளம் |
---|---|---|---|---|
1 | மேஷம்(புது வருடம்) | சித்திரை | மேடம் | வருடை(ஒரு வகை ஆடு) |
2 | விடை (இராசி)ரிஷபம் | வைகாசி | இடவம் | காளை அல்லது மாடு |
3 | மிதுனம் | ஆனி | மிதுனம் | இரட்டைகள் |
4 | கடகம்/கர்க்கடகம் | ஆடி | கர்கடகம் | நண்டு |
5 | சிம்மம் | ஆவணி | சிங்கம்(புது வருடம்) | சிங்கம் |
6 | கன்னி | புரட்டாசி | கன்னி | கன்னிப்பெண் |
7 | துலாம் | ஐப்பசி | துலாம் | இருபக்கத்திற்கும் நடுநிலையில் இருக்கும் துலாபாரம் |
8 | விருச்சிகம் | கார்த்திகை | விருட்சிகம்(>வ்ரிஷ்சிகம்) | தேள் |
9 | தனுசு | மார்கழி | தனு | வில் மற்றும் அம்பு சேர்ந்திருக்கும் ஒரு சிலை |
10 | மகரம் | தை | மகரம் | முதலை போன்ற உடல் கொண்டு, ஆட்டின் தலை (மலை ஆடு) கொண்ட உயிரினம் |
11 | கும்பம் | மாசி | கும்பம் | ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீர் |
12 | மீனம் | பங்குனி | மீனம் | இரு மீன்கள் |
தமிழ் மாதப் பிறப்பு
சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாளினைக் கொண்டு அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எடுத்துக் கொள்ளப்படும். சூரியன் மேஷ இராசில் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதம் ஆகும். இதனை புத்தாண்டுப் பிறப்பு என்றும் தமிழ் வருடப் பிறப்பென்றும் தமிழ் மக்கள் கொண்டாடுவர்.
தமிழ் மாதங்களின் கால அளவு கீழே தரப்பட்டுள்ளன.
- | தமிழ்ப் பெயர்(சூரிய மாதப்பெயர்) | வழங்கு பெயர்(சந்திர மாதப்பெயர்) | இராசி | நாள் | நாடி | விநாடி | தற்பரை | வசதிக்காக |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மேழம் | சித்திரை | மேடம் | 30 | 55 | 32 | 00 | 31 |
2 | விடை | வைகாசி | இடபம் | 31 | 24 | 12 | 00 | 31 |
3 | ஆடவை | ஆனி | மிதுனம் | 31 | 36 | 38 | 00 | 32 |
4 | கடகம் | ஆடி | கர்க்கடகம் | 31 | 28 | 12 | 00 | 31 |
5 | மடங்கல் | ஆவணி | சிங்கம் | 31 | 02 | 10 | 00 | 31 |
6 | கன்னி | புரட்டாசி | கன்னி | 30 | 27 | 22 | 00 | 31 |
7 | துலை | ஐப்பசி | துலாம் | 29 | 54 | 07 | 00 | 29/30 |
8 | நளி | கார்த்திகை | விருச்சிகம் | 29 | 30 | 24 | 00 | 29/30 |
9 | சிலை | மார்கழி | தனு | 29 | 20 | 53 | 00 | 29 |
10 | சுறவம் | தை | மகரம் | 29 | 27 | 16 | 00 | 29/30 |
11 | கும்பம் | மாசி | கும்பம் | 29 | 48 | 24 | 00 | 29/30 |
12 | மீனம் | பங்குனி | மீனம் | 30 | 20 | 21 | 15 | 31 |
- | மொத்தம் | - | - | 365 | 15 | 31 | 15 | - |